×

பலாப்பழ விதைகளில் பலே பிஸினஸ்!

இந்தியாவில் அதிகம் வீணாகும் பழங்களில் ஒன்று பலாப்பழம் எனில் அதன் விதைகளோ இரட்டிப்பாக குப்பைகளில் கொட்டப்படுகின்றன. இதனைத்தான் தன் தனித்துவமான பிஸினஸ் மூலதனமாக மாற்றியிருக்கிறார் கேரளா, வயநாடைச் சேர்ந்த வீட்டுத் தலைவி ஜெய்மி சாஜித். 2019ல் தனது வீட்டருகில் இருக்கும் வேளாண்மைக் கூடம் நடத்திய பயிற்சி வகுப்பு மூலம் இந்த தகவல் குறித்து அறிந்துகொண்ட ஜெய்மி இந்த விதைகளைச் சேகரிக்கத் துவங்கியிருக்கிறார். மலைப்பிரதேசங்களில் அதிகம் காணப்படும் இந்த பலா மரங்கள், கேரளாவில் இன்னும் அதிகமாகவே காணப்படுகின்றன. மேலும் அதிகளவில் வீணாகும் இந்த பலாப்பழ விதைகளை கொண்டு ஏதேனும் இனிப்பு வகையறாக்கள் செய்யலாம் என முயற்சி செய்திருக்கிறார் ஜெய்மி சாஜித்’ விதைகளை கொண்டு அதை பொடியாக்கி அதன் மூலமாக நிறைய இனிப்பு வகையறாக்கள் குறிப்பாக பாயசம் செய்வது எப்படி என அருகில் இருந்த வேளாண்மைப் பயிற்சிக்கூடத்தில் கற்றுக்கொண்டேன். மேலும் இது குறித்து இணையத்திலும் படித்து தெரிந்துகொண்டேன். அப்படித்தான் வீட்டில் நடந்த ஒரு சின்ன விழாவிற்கு இந்த பாயசத்தை ஸ்பெஷல் உணவாக பரிமாறினேன். ஒவ்வொருவரும் ’ரொம்ப டேஸ்ட்டா இருக்கு’ எனக் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட்டாங்க. இந்த பாயசம் அடுத்த ஒரு வாரம் எங்கள் ஏரியா முழுக்க பரவ ஆரம்பித்தது. நிறைய பேர் தங்களுடைய வீட்டு விசேஷங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பாயசம் செய்து தர முடியுமா எனக்  கேட்க ஆரம்பித்தார்கள். அங்கே ஆரம்பித்தது இந்த பிஸினஸுக்கான பொறி’ எனத் தன்னம்பிக்கை மலர சொல்லும் ஜெய்மா கிட்டத்தட்ட பல்லாயிரம் பலாப்பழம் விவசாயிகளுக்கு இன்று மிகப்பெரிய தூணாகவே மாறி இருக்கிறார். நானும் என் கணவரும் இணைந்து வருடம் முழுக்க வீணாகும் இந்த பலாப்பழ விதைகளை எப்படி சுத்தம் செய்து பொடியாக்குவது என நிறைய மெஷின்களை தேடி அலைந்தோம். அந்த தேடல்தான் என்னை தொழில் துவங்கும் அளவிற்கு யோசிக்க வைத்தது. எம்.ஏ மலையாளம் படித்த நான் எப்போது திருமணமானதோ அப்போதே வீட்டுத் தலைவியாக நான் உண்டு என் குடும்பம் உண்டு என இருந்தேன். என்னை நான் ஒரு தொழில் முனைவராக யோசித்ததே கிடையாது என்கிறார் ஜெய்மா. ‘வயநாடு மற்றும் அதன் சுற்றங்களில் உள்ள பெரும்பாலான பலாப்பழ விவசாயிகளை ஒன்றிணைத்து அவர்கள் வியாபாரத்திற்கு விற்பனை செய்தது போக மீதமுள்ள பழங்களையும், விதைகளையும் தான் விலைக் கொடுத்து எடுத்துக்கொள்வதாகச் சொல்கிறார் ஜெய்மா. மேலும் இதற்கென தனி சேகரிப்புத் திட்டம் துவங்கி, குழுக்களையும் உருவாக்கியிருக்கிறார். கோடைகாலத்தில் மட்டுமே கிடைக்கும் பழங்கள் என்றாலும் பெருமளவில் இந்த பழங்கள் வீணாகும். வீணாகும் பழங்கள்தான் ஜெய்மாவின் குறிக்கோள். இவருக்கு உதவியாக உள்ளூர் உணவு மசாலா, பானங்கள் மிக்ஸ், ஹோம்மேட் உடனடி சமையல் பொடிகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றும் கை கொடுத்தது. விதைகள் அத்தனையையும் பொடிகளாக மாற்றி ரெடிமேட் பலாப்பழ விதைகள் பாயசம் மிக்ஸ் உருவாக்கியிருக்கிறார் ஜெய்மி சாஜித். கிட்டத்தட்ட மாநிலத்தில் விளையும் 10% பலாப்பழங்களை கொள்முதல் செய்கிறார் ஜெய்மா. ‘எனது பிஸினஸில் அக்கம் பக்கம் வீட்டார், வீட்டுத் தலைவிகள், என அத்தனை பேரையும் ஒன்றிணைத்தேன்’ என்னும் ஜெய்மாவை கேரளா கூட்டுறவு, வேளாண் அமைப்புகள் துவங்கி பல இயற்கை சார் அமைப்புகள் பாராட்டி அரசு சார் விருதுகள், ஆதரவுகள், தொழில் உதவிகள் என நிறைய உதவிகள் செய்துவருகின்றனர். தற்போது ஜெய்மி சாஜித்யின் பலாப்பழ விதை பாயசம் மிக்ஸ்தான் கேரளாவின் மிக பிரபலமான இனிப்பு வெரைட்டியாக மாறியிருக்கிறது. மேலும் மாநிலத்தின் பல திசைகளில் இருந்து ஜெய்மாவை நேரில் சந்தித்து நேரடியாக இதற்கான பயிற்சிகள் பெற்று கிளைகள், ஃபிரான்சைஸ்கள் என பல பெண்கள் தொழில் துவங்கி வருகிறார்கள். வெறும் பத்து நிமிடங்களில் தயாரிக்கக் கூடிய இந்த பாயசம் மிக்ஸ்தான் இப்போது கேரளா குடும்பங்களின் விருப்பமான இனிப்பாக மாறியிருக்கிறது. மேலும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் கூட விற்பனையாகத் துவங்கியிருப்பதாகவும் மகிழ்வுடன் சொல்கிறார் ஜெய்மி சாஜித். இதில் சிறப்பு என்னவென்றால் ஒரு உணவு புராடெக்ட் நிறுவனத்திடம் தனது பாயசம் மிக்ஸை ஒப்படைக்காமல் பல நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து தனது பிஸினஸை பெருக்கி வருகிறார் ஜெய்மா.  தொகுப்பு : ஷாலினி நியூட்டன்

The post பலாப்பழ விதைகளில் பலே பிஸினஸ்! appeared first on Dinakaran.

Tags : India ,Dinakaran ,
× RELATED தேர்தல் ஆணையரை சந்திக்கும் I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள்